மாமியார் மெச்சும் மருமகள்!!
வேதாகமத்தில் நல்ல மாமியார் மருமகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அது நெகோமி - ரூத் தான்.
தன் கணவனை இழந்த பிறகும், தன் மாமியாரை விட்டு தன் பிறந்தகம் செல்லாமல் மாமியாரோடு ரூத் தங்கியது எத்தனை ஆச்சரியமானது, அற்புதமான அன்பு!!
ரூத்தைப் போன்று சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க வேண்டுமா?? இதோ சில முக்கியமான டிப்ஸ்.....
1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.
2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.
3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.
5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.
6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.
7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.
8.எல்லா தாய்மார்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.