Thursday, January 31, 2008

ஆரோக்கியம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நமது உடல் கடவுளின் இல்லம்.

ஒன்றுக்கொன்று தொடர்பு அதிகமாயுள்ள பாவத்திற்கும் வியாதிகும் நமது உடலை விலக்கிக் காத்துக்கொள்ள நம்மால் முடிந்த அத்தனையும் செய்ய வேண்டும்.

நன்கு சாப்பிட வேண்டும்,நன்கு தூங்க வேண்டும், போதுமான அளவு உடற்பயிற்சி செய்யவேண்டும், கடினமாய் உழைக்க வேண்டும்.

'சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழு!'

இப்பொற்கட்டளை யாவருக்கும் உரியது.

தெய்வீக சுகமளிப்பு வரங்களும், மருத்துவக்கலையும் நமது ஆரோக்கியத்திற்காய்க் கடவுள் தந்த அருட்கொடைகளாகும்.

விடுமுறை கட்டாயம் எடுக்க வேண்டும்.

கடவுள் ஆறு நாள் வேலை செய்ததும் ஒரு நாள் லீவு போட்டுவிடுவார்!

Wednesday, January 30, 2008

நன்றியுணர்வு..



நன்றிகெட்ட உலகில் வாழும் நாம் கடவுளுக்கும் மனிதருக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்க நம்மை எப்பொழுதும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

நன்றியுணர்வு இருக்கத்தான் செய்கிறது என்று இராமல், சொல்லாலும் செயலாலும் பாராட்டுதலுடன் அதை வெளிக்காட்ட வேண்டும். பிறருக்கு நன்றிகூறமுடியாதபடி நமது தொண்டையை அடைப்பது பெருமையே.சிறுவயது முதல் நமக்குதவியவர்களின் பட்டியலொன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டால் பிறந்த நாட்கள், மறுபடி பிறந்த நாட்கள் மற்றும் நிறைவு விழாக்களின்போது அன்னாருக்குத் தகுந்த வாழ்த்துக்கள் அனுப்பப் பேருதவியாகயிருக்கும்.

Tuesday, January 29, 2008

பொறுமை...



நாம் சுறுசுறுப்பின்றி சோம்பேறியாயிருக்கக் கூடாது:

அதே வேளையில் கடவுளுக்கு முந்திக்கொண்டும் ஓடக்கூடாது.

கடவுளோடு நடப்பதென்றால் அவரது வேகத்திலேயே அடியெடுத்து வைப்பதாகும். ஆத்திரப்பட்டு ஆண்டவர் எதையும் செய்துவிடுபவரல்ல:

ஏனெனில் யாவும் தமது ஆளுகைக்குள்ளேயே இருக்கிறதென்று அவருக்குத் தெரியும்.

இவ்வுண்மையை நாம் நம்பினால் நாமும் பதறமாட்டோம்.

கடவுளின் தாமதங்கள் மறுப்புகளல்ல. அவர் எல்லாவற்றையும் அழகாக அதினதின் காலங்களில் செய்கிறவர்.

பொறுயின்மையினால் உண்டாகும் பாதிப்புகளை சரிசெய்வது அரிது. கடவுள் நமக்கென்று நியமிக்கும் குறிகளை எட்ட குறுக்குவழியே கிடையாது.

சரியான பாதை நீண்டதாகவும் நொடிகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்:

ஆனால் அதில்தான் கடவுள் நம்மை வளர்ப்பித்து முதிர்ச்சியடையச் செய்கிறார்.

பொறுமையே பூரணம்:

அதுவே நற்குனங்களின் நாயகி:

கடவுள் நம்மிடம் பொறுமையாயிருப்பது போலவே நாமும் எல்லாரிடமும் பொறுமையாயிருக்க வேண்டும்.

Sunday, January 13, 2008

கலப்புத் திருமணம்



"யூதர் என்றும் கிரேக்கர் என்றும் இல்லை:
அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்" ( கல 3:28 )






இன்று பல கலப்புத் திருமணங்கள் நம் நாட்டில் நடைபெறுகின்றன. இதைத் தீவரமாய் ஆதரிக்கும் பலருண்டு: அதே போல் எதிர்க்கும் பழமைவாதிகளும் உண்டு பைபிளில் இதற்குப் பதிலுண்டா?

நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேதாகமம் ஒருபோதும் மாற்றுக்கலாச்சாரத் திருமணங்களுக்கு எதிராய்ப் பேசுகிறதில்லை.

விசுவாசிகள் அவிசுவாசிகளை மணப்பதை மட்டுமே அது எதிர்க்கிறது ( 2 கொரி 6:14,15 ).

ஈசாக்குக்குக் கானானியரிடத்தில் பெண்கொள்ள வேண்டாமென ஆபிரகாம் கூறியது மாற்றுக்கலாச்சாரத் திருமணத்திற்கு எதிர்ப்பாயல்ல: தன்னை எந்நாட்டிலிருந்து கடவுள் வேறுபிரித்தாரோ, அந்நாட்டிற்குத் தனது மகன் திரும்பச் செல்லக்கூடாது என்பதற்காகவே.
கலப்பு மணம் செய்த மோசேக்கு எதிராய்ப் பேசிய மிரியாம்மீது கடவுள் சினங்கொண்டார் ( எண் 12:1,9 ).

யோசேப்பின் மனைவி எபிரெயப் பெண்ணல்ல ( ஆதி 41:45 ).
வேற்று நாட்டவரை மணமுடித்தால் பிள்ளைகளுக்குத் தாங்கள் எதைச் சேர்ந்தவர்களென்று குழப்பம்!


வேற்று மொழியினரென்றால் பொதுவானதொரு மொழியில் இருவரும் தேர்ந்திரிந்தாலொழிய நெஞ்சோடு நெஞ்சு பேசமுடியாது!
ஆகவே இதில் நடைமுறை ஞானம் வேண்டும்.

எல்லா காரியங்களும் பொருத்தமாயிருந்து, இருவரும் விசிவாசிகளாய் இருக்கும் பட்சத்தில், சாதி வித்தியாசம் என்ற ஒரே காரணத்தால் பெண்ணையோ மாப்பிள்ளையையோ வேண்டாமென்று சொல்வது கடவுளுக்கு பிரியமாயிருக்காது.

Wednesday, January 2, 2008

நாளொரு மேனி !!!




"ஆண்டவரை தன் நம்பிக்கையாய்க் கொண்டிருப்பவன் தண்ணீர் அருகில் நடப்பதும், நீரோடை ஓரமாய் வேர்விடுகிறதும், வெட்பம் வருகிறதைக் காணாமல் இலை பசுமையாயிருக்கிறதும், மழை குறைவான வருடத்திலும் காய்ந்து போகாமல் தவறாது கனிகொடுக்கிறதுமான மரம்போல் இருப்பான்" (எரே 17:8)

உங்கள் ஆன்மீக வாழ்வில் நீங்கள் இன்னும் வளருவதற்கென்றே இவ்வாண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் எதிராகவும் இருக்கும் நபர்கள் மற்றும் காரியங்களைப் பார்த்து ஆண்டவர் 'என் மக்களை வளரவிடு' என்று ஆணையிடுகிறார்.
கடவுள் உங்கள் பக்கம், எனவே வெற்றி உங்களுக்குத்தான்!

வேதத்தை தினமும் வாசியுங்கள்...
வாசிப்பதை சிந்தித்துப்பாருங்கள்....
விசுவாசத்துடன் கீழ்படியுங்கள்!!!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருவீர்கள்!

WISH YOU A HAPPY NEW YEAR OF GROWTH AND FRUITFULNESS !