Wednesday, February 6, 2008

சோர்ந்துபோகாதே!

"ஆண்டவர் நம்மை வருத்தினாலும், தமது பேரன்பால் இரக்கம் காட்டுவார்" - புலம்பல் 3:32

இயேசுவின் வாழ்வில் பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவரது மனதில் கீழ்வரும் கேள்விகள் எழும்பியிருக்கும்..

"இது எனக்குத் தேவைதானா?
எல்லாக் காரியங்களிலும் என் தந்தைக்கு நான் கீழ்படியவில்லையா? நான் மக்களுக்கு நல்லது மட்டுந்தானே செய்தேன்? ஏன் ஆண்டவரே, ஏன்தான் நான் இப்படி பாடுபடவேண்டுமோ?"

பிறரது பிரச்சனைக்களுக்காய்க் கரிசனை கொள்வதின் மூலம் இயேசு சுயபரிதாபத்தை மேற்கொண்டார்.

மூன்று முக்கிய எடுத்துக்காட்டுக்கள் இதோ...

1.எருசலேம் பெண்மணிகள்:

எருசலேமின் தெருக்களில் இயேசு சிலுவையைச் சுமந்து நடந்து செல்கையில்,
அங்குள்ள பெண்கள் அவருக்காய் அழுது புலம்பினர். அவரோ அவர்களைத் திரும்பிப் பார்த்து " எனக்காக அழாமல், உஙளுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் " என்றார். ( லூக் 23:27-31).

தான் மகிமையும் மகிழ்வும் நிறைந்த நாட்களை அனுபவிக்க பரலோகம் செல்கிறார்; ஆனால் அப்பெண்மணிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமோ வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கொடியவையாயிருக்குமென இயேசு உணர்ந்தார். அவர்களது எதிர்காலப் பாடுகளைக் குறித்த எண்ணம் அவரது அன்றையப் பாடுகளிலிருந்து அவரது பார்வையைப் பறித்தது.

2.சிலுவைக் கள்ளன்:

இயேசுவுடன் சிலுவையிலறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன் அடுத்தவனைப் பார்த்து, " நாம் செய்தவற்றிற்குத் தகுந்த பலனை அடைகிறோம்; இவரோ தகாதது ஒன்றையும் செய்யவில்லையே" என்று அவனைக் கடிந்துக் கொண்டான்.(லூக்கா 23:39-41)

இவ்விதச் சொற்கள் இயேசுவின் காதுகளில் விழுந்த மாத்திரத்தில் அவை அவரைச் சுயபரிதாபத்தில் அமிழ்த்திருக்க முடியும். அவரோ அந்தக் கள்ளனின் பரிதாப நிலையையே கவனிக்கலானார். அவன் தண்டிக்கப்பட்டது நியாயந்தான்;

ஆனாலும் அவனது இறுதியான உணர்வையும் வேண்டுதலையும் இயேசு மதித்தார்.
"நான் பரதீசு செல்கிறேன்; நீயும் என்னோடு வா!" என்றுரைத்தார்.

3.சிலுவைக்கருகில் மாதுக்கள்

சிலுவைக்கருகில் மம்மி மேரி,மாமி மேரி, மகதலேனா மேரி ஆகிய மூன்று மேரிகளும் நின்றுகொண்டிருந்தனர்(யோ 19:25). கண்ணீர் சொருந்துகொண்டிருந்த அவர்களது கண்கள் இயேசுவைச் சுயபரிதாபத்திற்குள் தள்ளியிருக்கும்.





அவரோ அதற்கு இடங்கொடாமல், தமது தாயாரின் தேவையில் கரிசனை கொண்டார். மரியாளை யோவானுக்குத் தாயாகும், யோவானை மரியாளுக்கு மகனாகவும் கொடுத்தார்.

சிலுவைக்கு எதிரில் சுவீகார வைபவம்!

"எனது தந்தை தமது மகனைத் திரும்பப் பெறுகிறார். ஆனால் மம்மி, நீங்கள் ஒரு மகனை இழக்கிறீர்கள். எனக்குப் பதிலாக யோவானை எடுத்துக் கொள்ளுங்கள்!"

பிறரது பாடுகள் நமது பாடுகளைவிட அதிகம்.
இந்த அறிவு என்று நமக்கு உதிக்கிறதோ அன்றுதான் பாடுகளைச் சமாளிப்பது எப்படி என நாம் கற்றுக்கொள்ளத் துவங்குவோம்.