Tuesday, October 23, 2007

சண்டே க்ளாஸ் !!!




நான் சிறு வயதாயிருந்த போது, நாங்கள் செல்லும் ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடிந்தபின் சிறுவர்களுக்கு ' ஞாயிறு பாடசாலை' [Sunday Class] நடை பெறும். " சண்டே க்ளாஸ் போய்ட்டு வீட்டுக்கு வா" என்று என் அப்பா அம்மா வலியுறுத்துவார்கள். ஆனால் நானோ "சர்ச் சர்வீஸ் முடிவதற்க்கே 11 மணி ஆகிவிடுகிறது, அதன் பின் சண்டே க்ளாஸ் போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரனும், அதனால் நான் சண்டே க்ளாஸ் போகமாட்டேன்" என்று அடம்பிடித்து ஒவ்வொரு வாரமும் டிமிக்கி கொடுத்து விடுவேன்.

தற்பொதெல்லாம் ஆலய ஆராதனை நடைபெறும் அதேவேளையில் சண்டேக்ளாஸும் நடை பெறுகிறது. நான் சென்ற ஆலயத்திலும் அந்த முறை இருந்திருந்தால் நானும் ஒழுங்காக சண்டேக்ளாஸ் சென்றிருப்பேனோ?

அன்று ஒழுங்காக சண்டே க்ளாஸ் போகததை நினைத்து இன்று வருந்துகிறேன், இப்போது எங்கள் சர்ச்சில் சண்டே க்ளாஸ் ஆசிரியராக க்ளாஸ் எடுக்க அவ்வப்போது போவதுண்டு, அப்போதெல்லாம் அங்கே குழந்தைகள் மனப்பாட வசனம் சொல்லும் போதும், பாடல்களை செய்கையுடன் பாடும் போதும், " நாம் ஏன் இப்படி பட்ட ஒரு தருனத்தை நம் சிறு வயதில் தவற விட்டோம்" என என் மனம் வேதனைப் படும்.

பெற்றோரே, உங்கள் குழந்தைகளை தவறாமல் சண்டே க்ளாஸ் அனுப்புங்கள். அவர்களது இரட்ச்சிப்பிற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதுவே முதல்படி, அஸ்திபாரம், ஆணிவேர்!!!!

Sunday, October 14, 2007

மாமியார் மெச்சும் மருமகள்!!




வேதாகமத்தில் நல்ல மாமியார் மருமகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அது நெகோமி - ரூத் தான்.
தன் கணவனை இழந்த பிறகும், தன் மாமியாரை விட்டு தன் பிறந்தகம் செல்லாமல் மாமியாரோடு ரூத் தங்கியது எத்தனை ஆச்சரியமானது, அற்புதமான அன்பு!!
ரூத்தைப் போன்று சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க வேண்டுமா?? இதோ சில முக்கியமான டிப்ஸ்.....

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா தாய்மார்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

Wednesday, October 3, 2007

திருமணம் எங்கு நிச்சயக்கப்படுகிறது....




திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறது என கூறுவதை கேட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில் ' இவனுக்கு இவள் வாழ்க்கைத்துணை என்பதை தேவன் நிச்சியத்திருக்கிறார்.
அப்படியென்றால் ஏன் தேவன் தீர்மானிக்கிற திருமணங்கள் இன்று ' டைவர்ஸ்' வரை செல்கிறது ? இதனை வேதம் ஏற்றுக் கொள்கிறதா??

1. தேவன் இணைத்ததை மனிதன் பிர்க்காதிருக்க கடவன் என்று மத்தேயு 19:6 ல் இயேசு கூறுகின்றார். இதன் மூலம் கணவன் மனைவி பிரிவதை[ டைவர்ஸ் ] கர்த்தர் ஆட்சேபிக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் விபசாரம் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரிதலை [டைவர்ஸ்] வேதம் ஏற்றுக்கொள்கிறது.



ஆனால் இன்று கணவன் - மனைவி பிரிவது மேற்சொன்ன காரியத்திற்காக மாத்திரம் அல்ல.
எங்களுக்குள் ' Compatablity ' இல்லை, இனியும் சேர்ந்து வாழ்வது அர்த்தமற்றது என்று எத்தைனையோ இளம் தம்பதியினர் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் ஏறுகின்றனர்.

தம்பதியரே, 'compatablity'[ஒத்து போகுதல்] என்பது கம்புயூட்டருக்கு பொருந்தும் ஒரு வார்த்தை, தம்பதியருக்கு நடுவே 'Adjustablity'[அனுசரித்து போகுதல்] இருக்க வேண்டும்.

நம் பெற்றொருடன் நமக்கு கருத்து வேறுபாடுகள், ரசனை வேறுபாடுகள், தலைமுறை வித்தியாசங்கள் [ generation gap] என்று எத்தனை தான் ' incompatible'[ஒத்துப் போகாத]காரியங்கள் இருந்தாலும் நாம் அவர்களிடமிருந்து பிரிந்தா சென்று விடுகிறோம்?

திருமணத்தில் மட்டும் ' டைவர்ஸ்' என்ற ஒரு வழிமுறை இருப்பதால் நம் திருமணங்கள் அனுசரித்து வாழுதல், புரிந்துக் கொள்ள முயற்ச்சித்தல் என்று எதற்க்கும் இடம் தராமல் ' டைவர்ஸ்' செய்ய விரைகிறதோ??


'என் பிரியமே! நீ பூரண ரூபவதி;

உன்னில் பழுதொன்றுமில்லை,

நீ என்னுடையவள்!'


என்று ஒரு கணவன் மனைவியை

தன் நேசத்தால் நெகிழவைத்தால்.......



'அவர் முற்றிலும் அழகுள்ளவர்,

இவரே என் நேசர்;

என் நேசர் என்னுடயவர்,

நான் என் நேசருடையவள்;'


என்று ஒரு மனைவி கணவனிடம்

தன் பாசத்தை பொழிந்தால்.........


டைவர்ஸ் என்ற வார்த்தை அகராதியிலிருந்து நீக்கப்படும் அல்லவா???

Tuesday, September 25, 2007

பெண்களின் கவனத்திற்கு...




'Eve teasing' போய் தற்போது 'Adam teasing' துளிர் விட ஆரம்பித்து விட்ட போதிலும், இந்த 'eve teasing' க்கு காரணம் விடலை பருவ இளைஞனின் பருவ கோளாறா? , அவனது துணிச்சலா? , அவனது வெறித்தனமான செயலா?, அவனது சோம்பேறிதனமான பொழுதுப்போக்கா?? என்று ஆராய்ந்துப் பார்க்கும் போது, இவை மட்டும் காரணமல்ல, பெண்களின் நடத்தையும், உடை அலங்காரமும் தான் என்று பெண்களே பலர் ஒத்துக் கொள்வர்.







ஒரு நிமிட பார்வையிலேயே ஹார்மோன்களின் உந்துதலினால் ஒரு ஆண் கிளிர்ச்சியடையும் போது, பெண்கள் தங்கள் அங்கங்களை வெளிப்படுத்தும்வண்ணம் உடை அணிவது சரியானதா???


வேதத்தில் இதற்கான ஆலோசனை என்ன என்றுப் பார்ப்போம்.

நீதிமொழிகள் 31: 25 ல் வேதம் சொல்கிறது குணசாலியான ஒரு பெண்ணின் உடை 'பலமும் அலங்காரமுமாயிருக்கிறது' என்று.

அலங்கரித்துக் கொள்வது தவறில்லை, ஆனால் அது மற்றவரின், குறிப்பாக ஆண்களை திசை திருப்ப கூடிய வண்ணம் இருத்தல் கூடாது.


இன்றைய பெண்களின் நவநாகரீக உடைகள் அணிவதில் அதிக கவணம் தேவை. இறுக்கமான t-shirt, low hip Jeans, deep neck tops, போடுவதை தவிறுங்கள் பெண்களே.


நம் பண்பாட்டு உடையான சேலையையும் அழகாக, அங்கங்கள் தெரியாவண்ணம் அணிய வேண்டும்.


பவுல் பெண்களின் அழியாத அலங்காரமாக ' சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்' என்று Iபேதுரு 3: 4 ல் குறிப்பிடுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதும், உடன் சேர்ந்து அலுவலகத்தில் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆண்களுடன் பழகுவதிலும் ஒரு பெண்ணுக்கு வரைமுறை தெரிந்திருப்பது அவசியம்.



கண்டிப்பா ஆண்களோட ஒரு லிமிட்டோட தான் பழகணும். இயற்கையாவே ஆப்போஸிட் செக்ஸ் கிட்ட இருக்கற அட்ராக்ஷன் என்ன தான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சமாவது இருக்க தான் இருக்கும். ஒரு பெண் ஒரு பையனை காஷூவலா தொட்டாலும், அவனுக்கு அது சில உணர்ச்சிகளை தூண்டி விடலாம். அது மாதிரி ஒரு பையன் சாதாரணமா ஒரு பெண்ணை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவளுக்கு அது ஒரு மயக்கத்த தரலாம் .

அதனால் ஆண் பெண் நட்பிலும் கவணம் தேவை பெண்களே!

பொது இடங்களில் தேவையில்லாமல் உரக்க பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.



கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன்......

பொருத்தமான சிகையலங்காரம்

பண்பான உடையலங்காரம்

அடக்கமான நடைபாவனை

அமைதலான பேச்சுத்தன்மை



அத்தனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தன்னை காத்துக்கொள்ளும் பெண் நிச்சயம் பூவுலகிலும் விண்ணுலகிலும் புகழப்படுவாள்!!!



ஜெபம்:





கர்த்தாவே வஞ்சனையுள்ள சவுந்தரியத்தை நம்பாமல், வீணான அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உமக்கு பயப்படும் பயத்தோடுக் கூடிய குணசாலியான பெண்ணாக என்னை காத்துக்கொள்ளும்.

Monday, September 24, 2007

நான் ரசித்த பாடல்.........கேட்டுப்பாருங்க!




FMPB யின் 'ரிஷியா' பாடல்கள் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.........




இந்த பாடல் உங்கள் மனதையும் தொடும் என நம்புகிறேன்!!




இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்டு மகிழ........

Tamil Christian Songs - Hai Vol.1 - Enggum Olli

நான் ரசித்த பாடல்......பார்த்து ரசியுங்கள்!

இளமை, இனிமை, இறைவனுக்கே!

நீ உன் வாலிப பருவத்தில் உன் சிருஷ்டிகரை நினை' -பிரசங்கி 12:1



இளம் பருவத்தில் வாலிபர்களை இறைவனிடமிருந்து திசைதிருப்ப சாத்தான் எத்தனையோ ஆயுதங்களை பயன் படுத்துகிறான். அவன் உபயோகிக்கும் யுக்திகளில் இன்று பிரதானமானவை internet ம், சினிமா/தொலைக்காட்சி கேளிக்கைகளும், இரவு விடுதிகளின் களியாட்டங்களும் தான்.

வாலிப பருவத்தில் இயற்க்கையாகவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெறும் போது, மேற்சொல்லிய காரியங்கள் எளிதாக வாலிபர்களை தவறு செய்ய தள்ளிவிடுகிறது.


இதனை மேற்கொள்வது எப்படி?

மேற்கொள்வது கஷ்டம்தான்,ஆனால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே! கர்த்தரின் துணையோடு, வேதவசனங்களின் வழிநடத்துதலோடு எவ்வாறு இச்சோதனைகளை மேற்கொள்ளலாம் என பார்க்கலாமா.......

'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதனால்தானே!'

சங்கீதம் 119:9


1. எத்தகைய நண்பர்களுடன் நீங்கள் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது தவறல்ல,ஆனால் அதிலும் உங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொல்வது அவசியம்.



'உமக்குப் பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழ்ன்'


சங்கீதம் 119:63



ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்க!



2.சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25


இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சோம்பேறித்தனம் தாவீது ராஜாவை எவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது பாருங்கள்![II சாமுவேல் 11.2-4]





3.நீங்கள் இன்டர்னெட்டில், தொலைக்காட்ச்சியில் பார்க்கும் காட்ச்சிகளை, இயேசப்பாவும் உங்களோடு சேர்ந்துப் பார்த்து ரசிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரானது அல்ல என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.



'தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.' - சங்கீதம் 101:3



ஒரு ஆபாச காட்ச்சியையோ, வன்முறை நிகழ்ச்சியையோ நிச்சயம் இயேசப்பா உங்களுடன் சேர்ந்து ரசிக்கமாட்டார் என்பது தெள்ளந்தெளிவாக உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா???


'வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பகட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;

ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.' - பிரசங்கி 11:9


ஜெபம்:



"அன்புள்ள இயேசப்பா! என் இளமையைக்குறித்து ஒருவனும் என்னை அசட்டைபண்ணாதபடிக்கு, என் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க கற்றுத்தாரும்"

ஆமேன்.



பாடல்:
http://www.tamilchristiansongs.org/media/index.php?option=com_zina&Itemid=26&l=8&p=Fmpb_Songs/Rizia/Chumma.wma&m=1