Sunday, February 24, 2008

சோதனைகளை ஜெயிக்கலாம....வேத வசனம் கொண்டு!!

சோதனை வருவது பாவமல்ல: அதில் விழுவதுதான் பாவம்.
விழுந்தவுடன் பிறர்மீது குற்றஞ்சாட்டி, ஏதோவொன்றின் மீது பழி சுமத்துவது இயல்பு. ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் வந்த சோதனைகளை அவர்கள் எவ்விதம் சந்தித்தனர் என ஆராய்வது நடைமுறையில் பல படிப்பினைகளை நமக்குத் தரும்.

அறியாமை:

ஆதாம் ஏவாளுக்கு தேவ கட்டளை மிகவும் தெளிவானது.
அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. அது எளியது குறிப்பானது.[ஆதி 2:16,17]: என்றாலும் தவறினர்.

ஆனால், கல்லை அப்பமாக்ககூடாதென்றோ, கோபுரத்திலிருந்து குதிக்கக் கூடாதென்றோ பிதாவானவர் இயேசுவுக்குச் சொல்லியிருந்ததாகத் தகவல் இல்லை.
அப்படியானால் இக்காரியங்களைச் செய்யத் தூண்டிய பிசாசை இயேசு வென்றது எவ்வாறு?

அவர் திருவசனத்தின் "தத்துவங்கள்' முலம் செயல்பட்டார்.
அவர் தேவ நோக்கத்தை தெளிவாக புரிந்திருந்தபடியால் தேவத் திட்டங்களைச் சிதறடிக்கச் சத்துரு விரிக்கும் வலையை எளிதாய் அடையாளங் கண்டுக்கொண்டார்.

கல்லுகளை அப்பமாக்க வந்த முதல் சோதனையில் அவரது குமாரத்துவத்திற்கும், வசனத்தின் குறைவின்மைக்கும் சவால் வந்தது.
மேலிருந்து குதிக்கச் சொன்ன இரண்டாம் சோதனையில் பகட்டுக்கும், கடவுளை பரீட்ச்சிக்கவும் அழைப்பு வந்தது.
மூன்றாவது சோதனையில் மேனமைக்குக் குறுக்கு வழியைப் பிசாசு சொலிக்கொண்டிருந்தான்.

"ஐயோ எனக்குத் தெரியாது; என்வே தான் விழுந்தேன்" என்று ஒருநாளும் சொல்ல வேண்டாம். தேவன் தமது சத்தியத்தை நமது இருதயங்களில் வைத்துள்ளார். போதுமான வேதாகமத்தை கையில் தந்துள்ளார்.
மட்டுமல்ல, நம்மிலிருக்கும் ஆவியானவர் எதை ஏற்கவேண்டும், எதை எதிர்க்க வேண்டுமென போதித்தவண்ணமிருக்கிறார். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு கட்டளை தேவையில்லை.

அடுத்தவர்:

'விலக்கிய கனியைப் புசித்தாயோவென தேவன் ஆதாமைக் கேட்டபோது அவன் பழியைத் தன் மனைவியின்மூது போட்டுவிட்டான்[ஆதி 3:12]

இயேசுவுக்கு மிக வலுவான சோதனையொன்று பேதுரு மூலம் வந்தது.
எருசலேமில் தாம் எவ்விதமாய் பாடு பட்டுக் கொல்லபடுவாரென்று இயேசு முன்னரிவித்துக்கொண்டிருக்கையில், பேதுரு" ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே" என்று அவரைக் கடிந்துக்கொண்டான்.
சிலிவையைத் தவிர்க்க சத்துருவின் தந்திரத்தை இதில் அடையாளங்கண்டு கொண்ட இயேசு பேதுருவை நோக்கி," எனக்கு பின்னாகப்போ, சாத்தானே!" என்றார்[ மத் 16: 21-23]
தமக்கு மிகவும் நெருங்கியதொரு சீடன் சொன்னான் என்பதால் இயேசு அவன் கூறியதை மதிக்கவில்லை.

ஏவாள் அந்த பழத்தை ஆதாமிடம் கொடுக்கையில் இதைத்தான் அவன் செய்திருக்க
வேண்டும்," அப்பாலே போ சாத்தானே" என்று சொல்ல வேண்டியவன்,
" அருகில் வா , சாமந்தியே" என்றானோ????

நாம் உயிருக்குயிராய் நேசிப்பிவர்களிடமிருந்தும் நமக்கு சோதனை வரலாம்.சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்தும் சோதனை நம்மைச் சந்திக்கலாம்.

" என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே" [நீதி 1:10]

Tuesday, February 12, 2008

மனம்போன போக்கிலே...


சொந்த விருப்பத்தின்படி வாழ்வதையே பொதுவாக நாம் விடுதலை வாழ்வு என்று எண்ணுகிறோம். ஆனால் " நமக்குச் சரியாக தோன்றுவது முடிவில் சாவுக்கு நடத்தும் பாதையாகிடும்" என்று நீதிமொழிகள் 14:12இல் சாலோமோன் ஞானி கூறுகின்றார்.


நாம் அறிந்தோ அறியாமலோ நம் ஜெபங்களில் தேவ சித்தத்தின் 'சத்தத்தை' விட நமது விருப்பத்திற்கான 'சம்மதத்தையே' நாடுகிறோம்.
ஜெபத்தில் நமது விருப்பங்களை ஒவ்வித்தவுடன் நமக்கு புனித ஒப்புதல் கிடைத்துவிட்டதென நாமே திட்டங்களை செயல்படுத்தப் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவிடுகிறோம்.


ஆண்டவருக்குச் சித்தமானால்தான் உயிரோடே இருப்போம்.
அப்படியிருந்தால்தான் எதையும் செய்யமுடியும்.இவ்வித பயபக்தி அவசியம்.

பல சந்தர்ப்பங்களீல் நம் கனவுகளும் இலக்குகளுமே நம்க்கு விக்கிரகங்களாகிவிடுகின்றன. அந்த விக்கிரகங்களை அடையாவிட்டால் வாழ்வே சூன்யமாகிவிட்டது என்ற நிலைக்குக்கூட வந்துவிடுகிறோம். அச்சமயங்களில் தேவனது 'பரிபூரண' சித்தத்தைத் தவறவிட்டு அவரது 'அனுமதிச்; சித்ததிலேயே அமர்ந்துவிடுகிறோம்.

கடவுளின் கண்பார்வையைப் புரிந்துகொண்டு அதின்படி நடப்போர் பாக்கியவான்கள் (சங் 32:9).
தனித்து இயங்குவதற்கு தம்மிடம் வல்லமையையும் அதிகாரத்தையும் கிறிஸ்து வைத்திருந்தாலும், அவைகளை தாமாகவே களைந்துவிட்டு ,"தேவனே உமது சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன்" என்று தம்மை அர்ப்பணித்துக்கோண்டதால் இப்பூவுலக வாழ்வில் ஒருபோதும் தமது பிதவின் சித்தம் நிறைவேற்ற அவர் தவறவில்லை (எபி 10:7,9)




என் இஷ்டப்படி நடந்தேன்,ஐயோ; முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்!

Wednesday, February 6, 2008

சோர்ந்துபோகாதே!

"ஆண்டவர் நம்மை வருத்தினாலும், தமது பேரன்பால் இரக்கம் காட்டுவார்" - புலம்பல் 3:32

இயேசுவின் வாழ்வில் பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவரது மனதில் கீழ்வரும் கேள்விகள் எழும்பியிருக்கும்..

"இது எனக்குத் தேவைதானா?
எல்லாக் காரியங்களிலும் என் தந்தைக்கு நான் கீழ்படியவில்லையா? நான் மக்களுக்கு நல்லது மட்டுந்தானே செய்தேன்? ஏன் ஆண்டவரே, ஏன்தான் நான் இப்படி பாடுபடவேண்டுமோ?"

பிறரது பிரச்சனைக்களுக்காய்க் கரிசனை கொள்வதின் மூலம் இயேசு சுயபரிதாபத்தை மேற்கொண்டார்.

மூன்று முக்கிய எடுத்துக்காட்டுக்கள் இதோ...

1.எருசலேம் பெண்மணிகள்:

எருசலேமின் தெருக்களில் இயேசு சிலுவையைச் சுமந்து நடந்து செல்கையில்,
அங்குள்ள பெண்கள் அவருக்காய் அழுது புலம்பினர். அவரோ அவர்களைத் திரும்பிப் பார்த்து " எனக்காக அழாமல், உஙளுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் " என்றார். ( லூக் 23:27-31).

தான் மகிமையும் மகிழ்வும் நிறைந்த நாட்களை அனுபவிக்க பரலோகம் செல்கிறார்; ஆனால் அப்பெண்மணிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமோ வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கொடியவையாயிருக்குமென இயேசு உணர்ந்தார். அவர்களது எதிர்காலப் பாடுகளைக் குறித்த எண்ணம் அவரது அன்றையப் பாடுகளிலிருந்து அவரது பார்வையைப் பறித்தது.

2.சிலுவைக் கள்ளன்:

இயேசுவுடன் சிலுவையிலறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன் அடுத்தவனைப் பார்த்து, " நாம் செய்தவற்றிற்குத் தகுந்த பலனை அடைகிறோம்; இவரோ தகாதது ஒன்றையும் செய்யவில்லையே" என்று அவனைக் கடிந்துக் கொண்டான்.(லூக்கா 23:39-41)

இவ்விதச் சொற்கள் இயேசுவின் காதுகளில் விழுந்த மாத்திரத்தில் அவை அவரைச் சுயபரிதாபத்தில் அமிழ்த்திருக்க முடியும். அவரோ அந்தக் கள்ளனின் பரிதாப நிலையையே கவனிக்கலானார். அவன் தண்டிக்கப்பட்டது நியாயந்தான்;

ஆனாலும் அவனது இறுதியான உணர்வையும் வேண்டுதலையும் இயேசு மதித்தார்.
"நான் பரதீசு செல்கிறேன்; நீயும் என்னோடு வா!" என்றுரைத்தார்.

3.சிலுவைக்கருகில் மாதுக்கள்

சிலுவைக்கருகில் மம்மி மேரி,மாமி மேரி, மகதலேனா மேரி ஆகிய மூன்று மேரிகளும் நின்றுகொண்டிருந்தனர்(யோ 19:25). கண்ணீர் சொருந்துகொண்டிருந்த அவர்களது கண்கள் இயேசுவைச் சுயபரிதாபத்திற்குள் தள்ளியிருக்கும்.





அவரோ அதற்கு இடங்கொடாமல், தமது தாயாரின் தேவையில் கரிசனை கொண்டார். மரியாளை யோவானுக்குத் தாயாகும், யோவானை மரியாளுக்கு மகனாகவும் கொடுத்தார்.

சிலுவைக்கு எதிரில் சுவீகார வைபவம்!

"எனது தந்தை தமது மகனைத் திரும்பப் பெறுகிறார். ஆனால் மம்மி, நீங்கள் ஒரு மகனை இழக்கிறீர்கள். எனக்குப் பதிலாக யோவானை எடுத்துக் கொள்ளுங்கள்!"

பிறரது பாடுகள் நமது பாடுகளைவிட அதிகம்.
இந்த அறிவு என்று நமக்கு உதிக்கிறதோ அன்றுதான் பாடுகளைச் சமாளிப்பது எப்படி என நாம் கற்றுக்கொள்ளத் துவங்குவோம்.

Tuesday, February 5, 2008

சோதனைகள்...

சோதிக்கப்படுவது பாவமல்ல;சோதனையில் விழுவதே பாவம்.
சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும்போதெல்லாம் நாம் வலுவடைகிறோம்; அதற்கு தலையசைக்கும் போதெல்லாம் வலுவிழக்கிறோம்.
சோதனையை வெல்லவேண்டுமென்ற உள்ளான விருப்பமில்லையேல் வெற்றி சாத்தியமில்லை.
சோதனைகள் நாம் சற்றும் எதிர்பாராத நபரிடிமிருந்தோ, இடத்திலிருந்தோ, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நம்மைத் தாக்கலாம்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தில் எனக்குச் சோதனையே வராது என்று எவரும் சொல்லமுடியாது. எந்தப் பாவதிற்கு விரோதமாக மிகத் தீவிரமாய்ப் பிரசங்கித்தீர்களோ அந்தப் பாவத்தைச் செய்வதற்க்குதான் உங்களுக்கு திரும்ப திரும்ப சோதனை வரும்.
மற்றவர்களை எந்தக் காரியத்தில் திடப்படுத்தினீர்களோ அதில்தான் நீங்கள் அசைக்கப்படுவீர்கள்.
தினமும் கடவுளது உதவி நாடி, கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்!!!

Monday, February 4, 2008

ஜெபமே ஜீவன்....


கடவுள்மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதைமிகவும் உரிய முறையில் வெளிக்காட்டுவதே ஜெபம்.


ஜெபத்துடன் உபவாசத்தையும் கூட்டிக்கொள்ளும்போது. கடவுள் இல்லாமல் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்று அவரிடம் சொல்லுகிறோம்.


ஜெபம் என்பது கடவுளை மாற்றும் கருவியல்ல; அது அவரது திட்டத்துக்குள் நம்மைப் பொருந்தும்படி நம்மை மாற்றும் சாதனம்.


நாம் ஜெபத்தில் தளர்ந்தால் எல்லாப்பகுதிகளிலும் தவறுமாதலால் நமது ஜெபவாழ்வையே பிசாசு முதலாவது குறி வைக்கிறான்.

கடவுளோடுள்ள நமது உறவை ஜெபம் நெருக்கமாக்குவதால் ஜெபம் இனிதாகுகிறது.


எனக்கு விருப்பமானவற்றையெல்லாம் நான் கடவுளிடம் கேட்கிறேன்;

அவரோ எனக்குத் தேவையானவற்றை மட்டுமே எனக்குத் தருகிறார்.


எனவே பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

Friday, February 1, 2008

உபசரிப்பு!!

உபசரிப்பும் நலன் விசாரிப்புகளும் நவீனவுலகில் விரைவாய் மறைந்துகொண்டிருக்கிருக்கின்றன.
உறவுகள் ஆசாபாசமற்றிருக்கின்றன. தோழமை என்பதற்காகவே ஒருவரோடுரொவர் நேரம் செலவழிப்பது வீணாகத் தெரிகிறது. இது திருமறைக்கு முரணானது.
இந்தவிதப் போக்கினால் நாம் வாழ்க்கையின் உசிதங்கள் பலவற்றை இழந்துப்போகிறோம்.
மின்னஞ்சல் வேகமாகச் செல்லலாம்:ஆனால் அது ஒருபோதும் கையால் எழுதப்படும் கடிதங்களுக்கு இணையாகாது.
ஆனால் அன்பு நிறைந்த விசாரிப்புகள் நமக்குத் தேவையில்லை என்ற நிலைக்கு நாமே வரமுடியாது. நாம் உபசரிக்கும் சில அன்னியர்கள் கடவுளின் தூதர்களாயிருக்கலாம்.
'அன்னியரை உபசரிக்க நாடுங்கள்'