Sunday, December 30, 2007

புது வருட தீர்மானங்கள் !



புத்தாண்டு அல்லது பிறந்தநாள் தீர்மானங்கள் எடுக்காதவர் எவருமிலர் எனலாம். ஆனால், தோல்வி மேல் தோல்வி வரும்போது, வருந்தி இவ்விதத் தீர்மனங்கள் எடுப்பதில் அர்த்தமில்லையென நாளடைவில் முடிவுகட்டிவிடுகிற்றோம்.

இவ்வாண்டின்[2007] துவக்கத்தில் எடுத்த தீர்மானங்களை நினைத்துப்பார்த்தால் ஒருவேளை இவ்வித சோர்புகள் நமக்கு வரலாம்.

நல்ல தீர்மனங்கள் எடுக்க 'விருப்பமும்',
அதனை நடைமுறைப்படுத்த 'ஆற்றலும்' ,
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவராலேயே வருகின்றன. (பிலி-2:13).

கர்த்தரின் கரம் நமக்கு பின்னாலிருந்து செயல்படுகிறது. நல்ல தீர்மானங்களினால் நல்ல வளர்ச்சி உண்டாகும். இலக்கை சரியாகக் குறிக்கவும், மனச்சிதறல்களை தவிர்க்கவும் தீர்மாங்கள் உதவுகின்றன.

நமது தீர்மானங்கள் பலவற்றை கைக்கொள்ள முடியவில்லையே என் வரும் ஏக்கமும், அதைத் தொடர்ந்து வரும் குற்றவுணர்வும் நாம் திரும்பவும் முயற்ச்சிப்பதை தடை செய்கின்றன. ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குத் தோல்வி என்பது முடிவு அல்ல.நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் (சங் 37:23,24) (நீதி 24:16).

இருப்பினும் கீழ்கானும் யோசனைகள் நமக்கு உதவுமென நினைக்கிறேன்.....

*தீர்மானங்களில் பேராசை கூடவே கூடாது.
உதாரணமாக, நீங்கள் ஜெபத்தில் குறைவுள்ளவராக இருந்தால், இனி தினமும் 2 மணி நேரம் ஜெபிப்பேன் எனத் தீர்மானித்து விடாதீர்கள்.

அதற்க்கு பதிலாக, 15 நிமிடம் தினமும் ஜெபிபேன் என ஆரம்பியுங்கள்.
அதில் உறுதியாக இருந்து, படிப்படியாக உயருங்கள்.
பெரிய காரியங்களின் துவக்கம் சிறியதே!![சக 4:10}

* ஒரேவேளையில் நிறைய தீர்மானங்களை எடுக்காதீர்கள்.
ஜனவரியில் மொத்தமாய் 12 தீர்மாங்கள் எடுப்பதற்க்கு பதில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தீர்மானமாக எடுத்து, அதை செயல் படுத்தலாம்.
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது
நடத்தல்; அது குதித்தல் அல்ல!!
அது படிக்கட்டு;லிப்ட் அல்ல!!

*உங்கள் நெருங்கிய ஜெபத்தோழனோடு அல்லது வாழ்க்கைதுணையோடு உங்கள் புது வருட தீர்மானங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இவ்விதப் பொறுப்பான மேற்பார்வ்வை உங்களுக்கு பயனளிக்கும்.

*ஆனால் தனிப்பட்ட தீர்மாங்களை பிறருக்குச் சொல்ல வேண்டாம்.
தீர்மானங்கள் பொருத்தனைகள் அல்ல.
உங்கள் இருதயத்தின் விருப்பங்களை கடவுளிடம் கூறிவிட்டு, அவற்றின் நிறைவேறுதலுக்காக அவரைநம்பியிருங்கள்.{சங் 37:5]

Wednesday, December 12, 2007

புகை ஒரு பகை




"புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றுகிறேன்" என்போர் சிலர். சுருள் சுருளாய் புகைவிட்ட பலர் வாழ்நாளின் இறுதியில் சுருண்டு படுத்துக்கிடப்பது வாழ்க்கையின் வாடிக்கை...


இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பீடி, சிகரெட் கிடையாது.ஆகவே வேதத்தில் புகைப்பழக்கத்தைப் பற்றி நேரிடியான போதனை இல்லை. எனினும் பொது அறிவின்படி பார்த்தாலும், எல்லா சிகரெட் பெட்டிகளிலும், கீழ்கண்ட வாசகம் உண்டு:


Statutory warning: Smoking is injurious to health.


புகைத்தல் நம் ஆரோக்கியத்திற்க்குக் கேடு என்பது விஞ்ஞான ரீதியில் உலகம் முழுவதும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழகத்தில் பொதுவிடங்களில் புகைப்பது சட்டத்தின்படி குற்றம்..
வேதமும்" பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டும்"(3 யோ 2) என விரும்புகிறது. எனவே புகைப்பது கடவுளின் விருப்பத்திற்க்கு மாறானது.ஆகவேதான் புகைப்போர் பலரது மனசாட்சியும் அவர்களுக்கு உறுத்துதலாய் உள்ளது.


புகைப்பிடிப்போர் பெரும்பாலும் ஒருவித அடிமைத்தனத்துக்குள்தான் இருப்பார்கள்(யோ 8:34).ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குரிய உயரிய கோட்பாட்டை திருமறையில் இப்படி வாசிக்கிறோம்:"எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு,ஆனாலும் எல்லாம் தகுதியாய் இருக்காது; எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனாலும் நான் எதற்கும் அடிமைப்படமாட்டேன்" (1 கொரி 6:12). தீதாய் தோன்றும் எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள் என்றும் திருமறை போதிக்கிறது. புகை நமக்கு பகை!


பலர் இன்று இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். பிரச்சனைக்குத் தீர்வு இதோ:
"இயேசு உங்களை விடுதலையாக்கினால் உண்மையிலே நீங்கள் விடுதலையாவீர்கள்"(யோ 8:36)


தூயாதி தூயவரே, எங்களுக்கும் எங்களை சிற்றியிருப்போருக்கும்
தீமை விளைவிக்கும் எவ்விதப் பழக்கத்தையும்,
எங்களுக்கு எவ்வளவு பிரியமாயிருந்தாலும், விட்டு விலக சக்தி தாரும்!

Thursday, December 6, 2007

விசுவாசம்




என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனின் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் ( யோ 7:38)


நம்மிலுள்ள விசுவாசத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளும்படி கடவுள் விரும்புகிறார். அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளுதல் நமது விசிவாசத்தை பெருகச் செய்யும்."எவன் தன்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி 11:25)
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் விசுவாச பகிந்துக்கொள்ளுதலை பார்ப்போம்.


பர்னபா:
-------------
"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலிம் நிறந்தவனுமாயிருந்தான்.அநேக மக்கள் ஆண்டவரிடம் சேர்க்கப்பட்டார்கள்" (அப் 11:24).
விசுவாசத்தில் வல்லவனாகிய பர்னபா தன் விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொண்டதின் மூலம் கணக்கற்ற மக்கள் விசுவாசத்தைப் பெற்றவர்களாய் திருச்சபையில் இணைய முடிந்தது.


பவுல்:
----------
விசுவாசத்தை பகிர்ந்துக்கொள்ள பேச்சுத்திறன் அவசியமில்லை. தெளிவாக எளிய நடையில் சொன்னால் போதும். அதிகம் படித்தவராயிருந்தாலும் பவுல் தனது அறிவிலும் திறமையிலும் ஒருநாளும் நம்பிக்கை வைக்கவில்லை. திருவசனத்தின் வல்லமையையே அவன் எப்பொழுதும் நம்பினான்.அதுவே அவரது வெற்றி நிறைந்த திருபணியின் இரகசியமாகும் (1 கொரி 2:1-5).


திமிர்வாதக்கரனின் நண்பர்கள்:
--------------------------------------------------------
"படுக்கையில் கிடந்த முடக்குவாதமுற்றவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, முடக்குவாதக்கரனை நோக்கி:"மகனே தைரியமாயிரு:உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன: என்றார்.(மத் 9:2)
நான்கு பேர் தங்கள் விசுவாசத்தைத் திமிர்வாதக்காரன் ஒருவனோடு பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் தங்கள் செயலில் அதைக் காட்டினர். இயேசு அவர்களது விசுவாசத்தைக்கண்டு மனம் மகிழ்ந்தார். அவர்கள் விசுவாசத்தில் இன்னும் வளரும்படி, திமிர்வாதக்கரனைச் சுகமக்கினார்.


அம்மா, பாட்டியின் விசுவாசம்:
-------------------------------------------------------
"அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்,உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்:(2 தீமோ 1:5).
இவை தீமொத்தேயுவிற்க்கு பவுல் எழுதியது. பெண்களை உற்ச்சாகமூட்டும் வசன்ம் இது! வெளியே போய் பிரசங்கிக்க முடியாவிட்டாலும், வீட்டில்தானே விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொள்ள வழியிருக்கிறதே! நாம் கடவுள் மீதுல்ள விசுவாசத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளபோது, அது கடவுளைக் கன்படுத்துகிறது: பகிந்துக்கொள்ளும் நபரைக் கடவுள் கன்ப்படுத்துகிறார். எனவேதான் வேதத்தில் தீமோத்தேயுவின் பாட்டி, மற்றும் தாயாரின் பெயரும் வந்துவிட்டது!


இறைக்க இறைக்க ஊறும் ஊற்று;
சொல்லச் சொல்ல வளரும் விசுவாசம்!

அதிகாரத்திற்க்கு கீழ்படிதல்!!!



அதிகாரிகளுக்கு கீழ்படிதல், கடவுளுக்கு கீழ்படிதலாம். நாட்டின்


சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.



இனி வருமானவரி செலுத்த தவறமாட்டோம்:
சுங்கவரி அதிகாரிகளை ஏய்க்கமாட்டோம்:
எவருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்:
சாலை விதிகளை மீறமாட்டோம்:
இப்படி நாம் அனைவரும் உறுதிக்கொண்டால் உலகமே மாறிவிடுமே!



நாம்தான் உலகிற்கு உப்பு:
நமது உப்புத்தன்மை குறைந்துப்போனால் உலகம் கெட்டுப் பயனற்றுப்போகுமே.
நாம்தான் உலகிற்கு விளக்கு:
நமது பிரகாசம் மங்கிப்போனால் உலகம் இருண்டு படுகுழியில் இறங்குமே.(மத்:13,14)



நாட்டின் சட்டம் நற்செய்தியறிவிப்பைத் தடுத்தாலோ, இன்னொரு மதத்தை நம்மீது திணித்தாலோ அதற்குக் கீழ்படிய நாம் கடமைப்பட்டவ்ர்களல்ல (தானி 3:16)



நாம் வேலைசெய்யும் இடங்களிலுள்ள மேலதிகாரிகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படியவேண்டும். " வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல,உங்கள் தலைவர்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு கீழ்படிந்து , மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய்ப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் பணியாளராய் மனபூர்வமாய் கடவுளுடைய திருவுளத்தின்படிச் செய்யுங்கள்...மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்" (எபே 6:5-8) நமது அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது, கிறிஸ்துவைச் சேவிப்பதாம் (கொலோ 3:22-24)



மேலதிகாரிகளில் " நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல: முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும்" நாம் கீழ்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம் ( 1 பேது 2:18).



கடவுளுக்குக் கீழ்படிகிறேனென்று சொல்லியும் அதிகாரிகளுக்குக்
கீழ்ப்படியாதவன் வீணன்: கண்ணியம் அவனிடத்தில் இல்லை.

Saturday, December 1, 2007

மன்னிப்போம், மறப்போம்!



உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்..
உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (மத் 5:44)


சில வேளைகளில் நம் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைளால் நம்மை பகைக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவ்வித மக்களோடு சமாதனமாயிருப்பது இயலாமல் போகலாம். எனவே தான் "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனிதரோடும் சமாதானமாயிருங்கள்" என்கிறது வேதம். (ரோ 12:18).


நம்மீது கர்த்தர் எவ்வளவு பொறுமையாயிருந்தார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். எத்தனை முறை நாம் அவரை ஏமாற்றியும் அவர் நம்மை விட்டுவிடவில்லையே. இரக்கத்தில் செல்வந்தராகிய அவர் நாமும் பிறரை குறைந்தது ஏழெழுபது தடவையாவது மன்னிக்க எதிர்பார்க்கிறார்.


இளைஞனாகிய யோசேப்பு தனக்குத் துரோகம்செய்து தன்னைக் குழியில் எறிந்துவிட்ட தனது சகோதரரைக்கூட மன்னித்தது அன்றோ இறைவன் விரும்பும் குணம்?


நமது விரோதிக்களுக்காக ஜெபிக்கவேண்டும் (மத் 5:44). ஜெபமண்ணில் அன்பு தழைத்தோங்கும். நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகுகிறது. சாதாரணமாக நம்மால் முடியாத நிலையிலும் எதிர்போரை நேசிக்க அவர் தமது தூயாவியானவர் மூலம் தமது அன்பை நம்மில் ஊற்றுவார்.


பிசாசைக்கூட சபிக்க கடவுள் நம்மை அனுமதிக்கவில்லை(யூதா 9). எவரையும் சொல்லால் பழித்துவிடாதிருங்கள். கசப்பான வேர் இதயத்தில் வேண்டாம் ( எபி 12: 14,15). பழிவாங்குதல் கடவுளுக்கே உரியது. அந்த ஆயுதத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்.நம்மை துன்புருத்துவோருக்கு நன்மையொன்று செய்யத் தருணம் நோக்கியிருப்போம்.



நன்மைக்கு தீமை செய்வது சாத்தானின் பண்பு,
தீமைக்கு தீமை செய்வது மனிதனின் இயல்பு,
தீமைக்கு நன்மை செய்வதோ இறைவனின் மாண்பு!

Tuesday, November 27, 2007

கடவுளுக்குக் கடன்!


"வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு;
அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு" (நீதி 11:24)

யாருக்கு கொடுக்கவேண்டும்?
தேவையிலுள்ள எவருக்கும் உதவ வேண்டும். தீயோர் மீதும் நல்லோர் மீதும் தமது சூரியனை உதிக்கப்பண்ணும், நீதியுள்ளோர்மீதும் அநீதியுள்ளொர் மீதும் மழையை பொழிபவர் நமது இயேசு அப்பா! [ மத் 5:45]

எவ்வளவு கொடுக்க வேண்டும்?
வேதத்தில் இதற்குச் சட்டமில்லை. ஆனால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கடவுள் பிரியமாயிருக்கிறார்: என்றிருக்கிறது
[ 2 கொரி 9:7 ].
இவ்வசனம் எளியவருக்கு உதவுதலியே அடுத்தது.

பிச்சைக்காரர், ஊனமுற்றோர் போன்றொரை அழைத்து அவர்களுக்கு உணவுடை கொடுத்து " எளியோர் பண்டிகை" ஒன்று நாம் கொண்டாடினால் என்ன? எவ்வளவு குதுகலமாயிருக்கும்! வருகிற கிறிஸ்துமஸை அப்படிக் கொண்டாடுங்களேன்!

எளியவருக்கு அள்ளிக் கொடுப்போர் மீது வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவர்களுக்கு ' பொருளாதார' ஆசீர்வாதம் உண்டு. " ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்: அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" [ நீதி 19:17]

அப்படியே "உடலுக்கடுத்த" ஆசீர்வாதமும் உண்டு. பசியுள்ளோரோடு உங்கள் அப்பத்தைப் பகிர்ந்து ஆடையில்லாதோரை உடுத்துவிக்கும்போது உங்கள் ' சுகவாழ்வு துளிர்க்கும்" [ ஏசா 58:8]

" ஆன்மீக" ஆசீர்வாதமும் உண்டு, " ஏழைக்களுக்கு கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்" [ 2 கொரி 9:9,10]. எளியவரோடு ஈடுபாடு கொள்ளும்போது நமது ஆவியும் எளிமையாகிறது.

இறுதியாக, "நித்திய" ஆசீர்வாதம். நற்செயல்களில் செல்வந்தராகவும், தாராளாமாய்க் கொடுக்கிறவர்களாகவும் இருக்கையில் "நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி.....நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்"
[ 1 தீமோ 6:18, 19]

Tuesday, November 13, 2007

மேன்மைக்கு முன்னானது தாழ்மை!



உலகில் பலருக்கும் தாங்கள் மற்றவர்களைவிடல் பெரியவர்களாக - முக்கியமாணவர்களாக-தலைவர்களாக-உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவா உண்டு. இயேசுவின் சீடர்களும் இதற்கு விதிவிலகல்ல. ஒருமுறை அவர்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.[லூக்கா 22:24]


இயேசு அவர்களிடம் ," உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கட்டும்" என்றார் [லூக்கா 22:26]சிலுவையின் மரணம் வரை தம்மைத்தாமே தாழ்த்தினவரல்லவா நம் இயேசு?[பிலி 2:8] நாமும் கனம்பண்ணுகிறதிலே ஒருவருகொருவர் முந்திக்கொண்டு, மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் பெரியவர்களாக எண்ணுவோம் [ரோ 12:10;பிலி 2:3] எந்த வேலையும் நமது தகுதிக்கு குறைந்தது என்று எண்ணக்கூடாது. நமதாண்டவர் தம் சீடர்களின் கால்களையே கழுவித் துடைத்தாரல்லவா?[யோ 13:5]


இன்னும் அநேகருக்கு தங்களுடைய கல்வி, செல்வாக்கு, தோற்றம், சபைப்பிரிவு மற்றும் சாதி முதிலியவற்றைப்பற்றியெல்லாம் பெருமை." மனிதருக்குள்ளெ மேன்மையாக எண்ணப்படுவது கடவுளுக்கு முன்பாக அருவருப்பு [லூக்கா 16:15 இ]. நாம் இறக்கும்போது இவை எதுவும் நம்மோடுகூட வருவதில்லை. இவ்வுலக மேன்மையெல்லாம் குப்பை.இதையறிந்த பவுல் ," கிறிஸ்த்துவுக்காய் நான் எல்லாவற்றையும் இழப்பென்று விட்டேன்; குப்பையென்றே எண்ணுகிறேன்" என்றார் [ பிலி 3.11]


தூய்மையாய் வாழ்வதும் தங்கள் சாமர்த்தியமென எண்ணிக்கொண்டிருப்போரும் உண்டு. தன் பக்தியைக் குறித்து தம்பட்டம் அடித்துகொண்ட பரிசேயனின் ஜெபத்தை கர்த்தர் புறகணித்தார்.


நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கட்டும் [1 கொரி 10:12]
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது [ மத் 5:3]
மேனமைக்கு முன்னானது தாழ்மை[ நீதி 15:33 ஆ]


{ ஆர்.ஸ்டான்லி அவர்களின் 'நாளொரு மேனி என்ற தின தியான பகுதியிலிருந்து எழுதியது}

Sunday, November 4, 2007

Tamil Christian Song - Poorana Azhagullavar

என்னை கவர்ந்த பாடல் வரிகள், காட்சி அமைப்பு, பார்த்து ரசியுங்கள்!!

Monday, October 29, 2007

காலை ஜெபம்




கர்த்தர் கிருபையாக நமக்கு தரும் ஒவ்வொரு நாளிலும், அதிகாலையில் அந்த நாளுக்குள் அடியெடுத்து வைக்கும் முன், இந்த ஜெபத்தை ஜெபித்துப் பாருங்கள், எனக்கு ஆசீர்வாதமாக இம்மட்டும் இருக்கும் ஜெபம் இது...............



அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு எனனைத் தப்புவியும்;
உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன்.
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

ஆமேன்

Thursday, October 25, 2007

24 மணி நேர தமிழ் கிறிஸ்த்துவ FM ரேடியோ

இன்டெர்நெட்டில் தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள் கேட்டு மகிழ

துதி FM <- click this link!!!

Tuesday, October 23, 2007

சண்டே க்ளாஸ் !!!




நான் சிறு வயதாயிருந்த போது, நாங்கள் செல்லும் ஆலயத்தில் ஞாயிறு ஆராதனை முடிந்தபின் சிறுவர்களுக்கு ' ஞாயிறு பாடசாலை' [Sunday Class] நடை பெறும். " சண்டே க்ளாஸ் போய்ட்டு வீட்டுக்கு வா" என்று என் அப்பா அம்மா வலியுறுத்துவார்கள். ஆனால் நானோ "சர்ச் சர்வீஸ் முடிவதற்க்கே 11 மணி ஆகிவிடுகிறது, அதன் பின் சண்டே க்ளாஸ் போய்ட்டு நான் மட்டும் தனியா வீட்டுக்கு வரனும், அதனால் நான் சண்டே க்ளாஸ் போகமாட்டேன்" என்று அடம்பிடித்து ஒவ்வொரு வாரமும் டிமிக்கி கொடுத்து விடுவேன்.

தற்பொதெல்லாம் ஆலய ஆராதனை நடைபெறும் அதேவேளையில் சண்டேக்ளாஸும் நடை பெறுகிறது. நான் சென்ற ஆலயத்திலும் அந்த முறை இருந்திருந்தால் நானும் ஒழுங்காக சண்டேக்ளாஸ் சென்றிருப்பேனோ?

அன்று ஒழுங்காக சண்டே க்ளாஸ் போகததை நினைத்து இன்று வருந்துகிறேன், இப்போது எங்கள் சர்ச்சில் சண்டே க்ளாஸ் ஆசிரியராக க்ளாஸ் எடுக்க அவ்வப்போது போவதுண்டு, அப்போதெல்லாம் அங்கே குழந்தைகள் மனப்பாட வசனம் சொல்லும் போதும், பாடல்களை செய்கையுடன் பாடும் போதும், " நாம் ஏன் இப்படி பட்ட ஒரு தருனத்தை நம் சிறு வயதில் தவற விட்டோம்" என என் மனம் வேதனைப் படும்.

பெற்றோரே, உங்கள் குழந்தைகளை தவறாமல் சண்டே க்ளாஸ் அனுப்புங்கள். அவர்களது இரட்ச்சிப்பிற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதுவே முதல்படி, அஸ்திபாரம், ஆணிவேர்!!!!

Sunday, October 14, 2007

மாமியார் மெச்சும் மருமகள்!!




வேதாகமத்தில் நல்ல மாமியார் மருமகளுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அது நெகோமி - ரூத் தான்.
தன் கணவனை இழந்த பிறகும், தன் மாமியாரை விட்டு தன் பிறந்தகம் செல்லாமல் மாமியாரோடு ரூத் தங்கியது எத்தனை ஆச்சரியமானது, அற்புதமான அன்பு!!
ரூத்தைப் போன்று சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க வேண்டுமா?? இதோ சில முக்கியமான டிப்ஸ்.....

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா தாய்மார்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

Wednesday, October 3, 2007

திருமணம் எங்கு நிச்சயக்கப்படுகிறது....




திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப் படுகிறது என கூறுவதை கேட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில் ' இவனுக்கு இவள் வாழ்க்கைத்துணை என்பதை தேவன் நிச்சியத்திருக்கிறார்.
அப்படியென்றால் ஏன் தேவன் தீர்மானிக்கிற திருமணங்கள் இன்று ' டைவர்ஸ்' வரை செல்கிறது ? இதனை வேதம் ஏற்றுக் கொள்கிறதா??

1. தேவன் இணைத்ததை மனிதன் பிர்க்காதிருக்க கடவன் என்று மத்தேயு 19:6 ல் இயேசு கூறுகின்றார். இதன் மூலம் கணவன் மனைவி பிரிவதை[ டைவர்ஸ் ] கர்த்தர் ஆட்சேபிக்கிறார் என்பது தெளிவாகிறது.

2. கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் விபசாரம் செய்தால் மாத்திரமே அவர்கள் பிரிதலை [டைவர்ஸ்] வேதம் ஏற்றுக்கொள்கிறது.



ஆனால் இன்று கணவன் - மனைவி பிரிவது மேற்சொன்ன காரியத்திற்காக மாத்திரம் அல்ல.
எங்களுக்குள் ' Compatablity ' இல்லை, இனியும் சேர்ந்து வாழ்வது அர்த்தமற்றது என்று எத்தைனையோ இளம் தம்பதியினர் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் ஏறுகின்றனர்.

தம்பதியரே, 'compatablity'[ஒத்து போகுதல்] என்பது கம்புயூட்டருக்கு பொருந்தும் ஒரு வார்த்தை, தம்பதியருக்கு நடுவே 'Adjustablity'[அனுசரித்து போகுதல்] இருக்க வேண்டும்.

நம் பெற்றொருடன் நமக்கு கருத்து வேறுபாடுகள், ரசனை வேறுபாடுகள், தலைமுறை வித்தியாசங்கள் [ generation gap] என்று எத்தனை தான் ' incompatible'[ஒத்துப் போகாத]காரியங்கள் இருந்தாலும் நாம் அவர்களிடமிருந்து பிரிந்தா சென்று விடுகிறோம்?

திருமணத்தில் மட்டும் ' டைவர்ஸ்' என்ற ஒரு வழிமுறை இருப்பதால் நம் திருமணங்கள் அனுசரித்து வாழுதல், புரிந்துக் கொள்ள முயற்ச்சித்தல் என்று எதற்க்கும் இடம் தராமல் ' டைவர்ஸ்' செய்ய விரைகிறதோ??


'என் பிரியமே! நீ பூரண ரூபவதி;

உன்னில் பழுதொன்றுமில்லை,

நீ என்னுடையவள்!'


என்று ஒரு கணவன் மனைவியை

தன் நேசத்தால் நெகிழவைத்தால்.......



'அவர் முற்றிலும் அழகுள்ளவர்,

இவரே என் நேசர்;

என் நேசர் என்னுடயவர்,

நான் என் நேசருடையவள்;'


என்று ஒரு மனைவி கணவனிடம்

தன் பாசத்தை பொழிந்தால்.........


டைவர்ஸ் என்ற வார்த்தை அகராதியிலிருந்து நீக்கப்படும் அல்லவா???

Tuesday, September 25, 2007

பெண்களின் கவனத்திற்கு...




'Eve teasing' போய் தற்போது 'Adam teasing' துளிர் விட ஆரம்பித்து விட்ட போதிலும், இந்த 'eve teasing' க்கு காரணம் விடலை பருவ இளைஞனின் பருவ கோளாறா? , அவனது துணிச்சலா? , அவனது வெறித்தனமான செயலா?, அவனது சோம்பேறிதனமான பொழுதுப்போக்கா?? என்று ஆராய்ந்துப் பார்க்கும் போது, இவை மட்டும் காரணமல்ல, பெண்களின் நடத்தையும், உடை அலங்காரமும் தான் என்று பெண்களே பலர் ஒத்துக் கொள்வர்.







ஒரு நிமிட பார்வையிலேயே ஹார்மோன்களின் உந்துதலினால் ஒரு ஆண் கிளிர்ச்சியடையும் போது, பெண்கள் தங்கள் அங்கங்களை வெளிப்படுத்தும்வண்ணம் உடை அணிவது சரியானதா???


வேதத்தில் இதற்கான ஆலோசனை என்ன என்றுப் பார்ப்போம்.

நீதிமொழிகள் 31: 25 ல் வேதம் சொல்கிறது குணசாலியான ஒரு பெண்ணின் உடை 'பலமும் அலங்காரமுமாயிருக்கிறது' என்று.

அலங்கரித்துக் கொள்வது தவறில்லை, ஆனால் அது மற்றவரின், குறிப்பாக ஆண்களை திசை திருப்ப கூடிய வண்ணம் இருத்தல் கூடாது.


இன்றைய பெண்களின் நவநாகரீக உடைகள் அணிவதில் அதிக கவணம் தேவை. இறுக்கமான t-shirt, low hip Jeans, deep neck tops, போடுவதை தவிறுங்கள் பெண்களே.


நம் பண்பாட்டு உடையான சேலையையும் அழகாக, அங்கங்கள் தெரியாவண்ணம் அணிய வேண்டும்.


பவுல் பெண்களின் அழியாத அலங்காரமாக ' சாந்தமும் அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணம்' என்று Iபேதுரு 3: 4 ல் குறிப்பிடுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரியில் படிப்பதும், உடன் சேர்ந்து அலுவலகத்தில் வேலை செய்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆண்களுடன் பழகுவதிலும் ஒரு பெண்ணுக்கு வரைமுறை தெரிந்திருப்பது அவசியம்.



கண்டிப்பா ஆண்களோட ஒரு லிமிட்டோட தான் பழகணும். இயற்கையாவே ஆப்போஸிட் செக்ஸ் கிட்ட இருக்கற அட்ராக்ஷன் என்ன தான் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் கொஞ்சமாவது இருக்க தான் இருக்கும். ஒரு பெண் ஒரு பையனை காஷூவலா தொட்டாலும், அவனுக்கு அது சில உணர்ச்சிகளை தூண்டி விடலாம். அது மாதிரி ஒரு பையன் சாதாரணமா ஒரு பெண்ணை அழகா இருக்கான்னு சொன்னா கூட அவளுக்கு அது ஒரு மயக்கத்த தரலாம் .

அதனால் ஆண் பெண் நட்பிலும் கவணம் தேவை பெண்களே!

பொது இடங்களில் தேவையில்லாமல் உரக்க பேசுவது, சத்தமாக சிரிப்பது போன்றவற்றை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.



கர்த்தருக்கு பயப்படும் பயத்துடன்......

பொருத்தமான சிகையலங்காரம்

பண்பான உடையலங்காரம்

அடக்கமான நடைபாவனை

அமைதலான பேச்சுத்தன்மை



அத்தனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தன்னை காத்துக்கொள்ளும் பெண் நிச்சயம் பூவுலகிலும் விண்ணுலகிலும் புகழப்படுவாள்!!!



ஜெபம்:





கர்த்தாவே வஞ்சனையுள்ள சவுந்தரியத்தை நம்பாமல், வீணான அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உமக்கு பயப்படும் பயத்தோடுக் கூடிய குணசாலியான பெண்ணாக என்னை காத்துக்கொள்ளும்.

Monday, September 24, 2007

நான் ரசித்த பாடல்.........கேட்டுப்பாருங்க!




FMPB யின் 'ரிஷியா' பாடல்கள் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.........




இந்த பாடல் உங்கள் மனதையும் தொடும் என நம்புகிறேன்!!




இந்த ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்டு மகிழ........

Tamil Christian Songs - Hai Vol.1 - Enggum Olli

நான் ரசித்த பாடல்......பார்த்து ரசியுங்கள்!

இளமை, இனிமை, இறைவனுக்கே!

நீ உன் வாலிப பருவத்தில் உன் சிருஷ்டிகரை நினை' -பிரசங்கி 12:1



இளம் பருவத்தில் வாலிபர்களை இறைவனிடமிருந்து திசைதிருப்ப சாத்தான் எத்தனையோ ஆயுதங்களை பயன் படுத்துகிறான். அவன் உபயோகிக்கும் யுக்திகளில் இன்று பிரதானமானவை internet ம், சினிமா/தொலைக்காட்சி கேளிக்கைகளும், இரவு விடுதிகளின் களியாட்டங்களும் தான்.

வாலிப பருவத்தில் இயற்க்கையாகவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெறும் போது, மேற்சொல்லிய காரியங்கள் எளிதாக வாலிபர்களை தவறு செய்ய தள்ளிவிடுகிறது.


இதனை மேற்கொள்வது எப்படி?

மேற்கொள்வது கஷ்டம்தான்,ஆனால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே! கர்த்தரின் துணையோடு, வேதவசனங்களின் வழிநடத்துதலோடு எவ்வாறு இச்சோதனைகளை மேற்கொள்ளலாம் என பார்க்கலாமா.......

'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதனால்தானே!'

சங்கீதம் 119:9


1. எத்தகைய நண்பர்களுடன் நீங்கள் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது தவறல்ல,ஆனால் அதிலும் உங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொல்வது அவசியம்.



'உமக்குப் பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழ்ன்'


சங்கீதம் 119:63



ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்க!



2.சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25


இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சோம்பேறித்தனம் தாவீது ராஜாவை எவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது பாருங்கள்![II சாமுவேல் 11.2-4]





3.நீங்கள் இன்டர்னெட்டில், தொலைக்காட்ச்சியில் பார்க்கும் காட்ச்சிகளை, இயேசப்பாவும் உங்களோடு சேர்ந்துப் பார்த்து ரசிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரானது அல்ல என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.



'தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.' - சங்கீதம் 101:3



ஒரு ஆபாச காட்ச்சியையோ, வன்முறை நிகழ்ச்சியையோ நிச்சயம் இயேசப்பா உங்களுடன் சேர்ந்து ரசிக்கமாட்டார் என்பது தெள்ளந்தெளிவாக உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா???


'வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பகட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;

ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.' - பிரசங்கி 11:9


ஜெபம்:



"அன்புள்ள இயேசப்பா! என் இளமையைக்குறித்து ஒருவனும் என்னை அசட்டைபண்ணாதபடிக்கு, என் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க கற்றுத்தாரும்"

ஆமேன்.



பாடல்:
http://www.tamilchristiansongs.org/media/index.php?option=com_zina&Itemid=26&l=8&p=Fmpb_Songs/Rizia/Chumma.wma&m=1

Friday, September 21, 2007

என் அன்பு தந்தைக்குச் சமர்பணம்.

அன்புள்ள அப்பா!


குழந்தை பருவத்தில்.....




கரம் பிடித்து நடக்க

கற்றுத் தந்து-



பள்ளி பருவத்தில்.....

மிதிவண்டி ஓட்ட

கற்றுத் தந்து-


கல்லூரி பருவத்தில்.....
அயல் நாட்டில் வாழ உயர்கல்வி
கற்றுத் தந்த நீங்கள்.............................



இன்று..

உங்கள் இழப்பினை தாங்கும் மனவழிமையினை

கற்றுத் தராதது ஏன்?

தனிமையில் கண்ணீர் கடலில் நீந்தி கரைசேர
கற்றுத் தராதது ஏன்??

என் சோகத்தை மறைத்து புன்முறுவல் புரிய
கற்றுத் தராதது ஏன்???




கேள்விகள், ஏக்கங்களுடன், உங்களை விண்ணுலகில் காணும்
நாளுக்காக காத்திருக்கும்
உங்கள் செல்ல மகள்!